இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த வெற்றியானது எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கடந்த சில நாள்களாகவே, வெள்ளம் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களைச் சந்தித்துள்ளனர். ஆனால் நாங்கள் போட்டியை விளையாடிய விதம், இது மக்களின் முகத்தில் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கும் என்று நினைக்கிறேன். மேலும் எங்கள் நாட்டின் ரசிகர்கள் அளவிற்கு கிரிக்கெட் பைத்தியமாக இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
போட்டியில் தோற்றாலும் அனைவரும் எங்களை ஆதரிக்கின்றனர். எனவே நம் நாட்டு மக்களுக்கு எப்படி ஏதாவது கொடுக்கலாம் என்று முயற்சி செய்தோம். அதனால் இந்த தொடர் வெற்றியானது எங்களுக்கு மிக முக்கியமானது. அதேசமயம் இதற்காக எங்கள் அணியைச் சேர்ந்த அனைவரும் கடந்த ஒன்றரை மாதங்களில் மிகவும் கஷ்டப்பட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் எங்கள் நாட்டில் கிரிக்கெட் என்பது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
Also Read: Funding To Save Test Cricket
எனவே, நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தோம். அத்போல் நாங்கள் அடுதடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளோம் என்பதால் அது எங்களை மக்களை ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். மேலும் அவர் புன்னகைப்பதை பார்க்கும் போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.