ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் கடந்த 2 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 282/7 ரன்கள் எடுத்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 58, ஷதாப் கான் 40, இஃப்திகார் அஹ்மது 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளும் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து 283 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65 ரன்களில் அவுட்டானார்.

Advertisement

அவருடன் மறுபுறம் அசத்திய இப்ராஹிம் ஸத்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பவுண்டரியுடன் 87 ரன்கள் குவித்து பாதி வெற்றியை உறுதி செய்தார். அவர்களுடன் மிடில் ஆர்டரில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சவாலை கொடுத்த ரஹ்மத் ஷா 77 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து 49 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 தொடர் தோல்விக்கு பின் முதல் முறையாக ஆஃப்கானிஸ்தான் வென்றது. மறுபுறம் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இத்தொடரில் 3ஆவது தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் பவுலிங், பேட்டிங் துறையிலும் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த தோல்வி வலியை கொடுக்கிறது. நாங்கள் நல்ல இலக்கை நிர்ணயித்தோம். ஆனாலும் பவுலிங் சிறப்பாக இல்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் ஒரு துறையில் சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள். ஆனால் இப்போட்டியில் நாங்கள் பவுண்டரிகளை தடுக்காமல் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது. பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக தொடங்கியும் மிடில் ஓவரில் விக்கெட்டுகள் தேவைப்பட்டபோது ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இருப்பினும் 3 வகையான துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஃப்கானிஸ்தானை பாராட்ட வேண்டும். அதனாலேயே அவர்கள் வென்றுள்ளார்கள். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் சிறப்பாக செயல்படாத நாங்கள் அடுத்த போட்டியில் சிறந்தவற்றை கொடுக்க முயற்சிப்போம். குறிப்பாக எங்களுடைய ஸ்பின்னர்கள் நல்ல லென்த்தை பின்பற்றவில்லை. அதனால் எங்களால் எதிரணி பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை போட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News