இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டுதான் ஐசிசி கோப்பையை வென்றது. 2013 சாம்பியன்ஸ் டிராபி தான் கடைசியாக இந்திய அணி வென்ற ஐசிசி கோப்பை. அதற்கு முன் 2011 உலக கோப்பை மற்றும் 2007 டி20 உலக கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களை இந்திய அணி வென்றது. இந்த 3 ஐசிசி தொடர்களையுமே தோனியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி வென்றது.
அதன்பின்னர் 2014 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 2 தொடர்களின் இறுதிப்போட்டி வரை சென்று தோற்ற இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது. 2021ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கே முன்னேறவில்லை.
2019 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2021 டி20 உலக கோப்பை ஆகிய 2 தொடர்களையுமே வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்டது இந்திய அணி. ஆனால் இரண்டிலும் ஏமாற்றமளித்தது.
இந்நிலையில், இந்திய அணி ஐசிசி கோப்பையை அண்மைக்காலத்தில் வெல்ல முடியமால் தவிப்பதற்கு என்ன காரணம் என்று, 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள யுவராஜ் சிங், “2011 உலக கோப்பையை நாங்கள் வென்றபோது இந்திய அணியில் எங்கள் ஒவ்வொருவருக்கும் நிலையான பேட்டிங் ஆர்டர் ஒன்று இருந்தது. 2019 உலக கோப்பையில் அதை சரியாக திட்டமிடவில்லை என்று நினைக்கிறேன். 2003 உலக கோப்பையில் கைஃப், மோங்கியா மற்றும் நான் ஆகிய மூவரும் 50க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றிருந்தோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் உள்ள பிரச்னையால் தான் டி20 உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது” என்று தெரிவித்தார்.