PAK vs NZ, 1st Test: கம்பேக் மோடில் சதமடித்த வில்லியம்சன்; முன்னிலைப் பெற்றது நியூசி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்திய கேப்டன் பாபர் ஆசாம் 161 ரன்னில் அவுட்டானார். ஆகா சல்மான் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃப்ராஸ் அகமது 86 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து சார்பில் சவுத்தி 3 விக்கெட், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், ஐஷ் சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. இதில் டாம் லேதம் 78 ரன்னுடனும், டெவான் கான்வே 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 92 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லேதம் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - ஹென்றி நிக்கோலஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஹென்றி நிக்கோலஸ் 22 ரன்களோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மேலும் 724 நாள்களுக்கு பிறகு கேன் வில்லியம்சன் பதிவுசெய்த முதல் டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டாம் பிளெண்டல் 42 ரன்னும், டேரில் மிட்செல் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், இஷ் சோதி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும், நௌமான் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 2 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.