PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கும் பில் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மாலனும் ரன் ஏதுமின்றி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் 30 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட்டும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய பென் டக்கெட் - ஹாரி ப்ரூக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 43 ரன்களில் ஆட்டமிழக்க, 31 ரன்களைச் சேர்த்திருந்த ஹாரி ப்ரூக்கும் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் கேப்டன் மோயின் அலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி 55 ரன்களைச் சேர்த்தார்.