PAK vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று தொடரை சமனிலையில் வைத்திருந்தன.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம் போல கேப்டன் பாபர் ஆசாம், ஷான் மசூத், ஹைதர் அலி, இஃப்திகார் அஹ்மத், ஆசிஃப் அலி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முகமது ரிஸ்வான், இப்போட்டியில் அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அதன்பின் அவரும் 63 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் குரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து இலக்கி நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியிலும் அலெக்ஸ் ஹேல்ஸ், பிலீப் சால்ட், பென் டக்கெட், ஹாரி ப்ரூக் என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன், கேப்டன் மோயின் அலி இணை ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தின. பின் டேவிட் மலான் 36 ரன்னும், கேப்டன் மொயின் அலி 51 ரன்னும் அடித்தனர்.
ஆனாலும் 20 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.