PAK vs ENG, 6th T20I: கம்பேக் கொடுத்த பாபர் ஆசாம்; இங்கிலாந்துக்கு 170 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த 5 போட்டிகளில் மூன்றில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 3-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆறாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான அணியில் இன்றைய தொடக்க வீரராக களமிறங்கிய முகமது ஹாரிஸ் 7 ரன்களிலும், ஷான் மசூத், ஹைதர் அலி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் தனது பங்கிற்கு 31 ரன்களைச் சேர்த்தார்.
மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கேப்டன் பாபர் ஆசாம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 87 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.