உலகக்கோப்பை 2023: கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது பாகிஸ்தான்!

Updated: Sun, Aug 06 2023 21:56 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தொடங்கி நவம்பர் 19  ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா என்பது பல மாதங்களாக சந்தேகமாகவே நீடித்து வந்தது.

பாகிஸ்தான் அணிக்கானப் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கருத்துகளும் வலம் வந்தன. இந்த நிலையில்,  இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில்  பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றையும் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், “விளையாட்டு அரசியலுடன் இணையக் கூடாது என்பதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால், இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணியை இந்தியா அனுப்ப எங்களது அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகள் இதுபோன்ற விளையாட்டுத் தொடர்களுக்கு குறுக்கீடாக இருக்காது என பாகிஸ்தான் அரசு நம்புகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு குறித்து ஐசிசியிடமும், இந்திய அதிகாரிகளிடமும் எங்களது அக்கறையை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் பாகிஸ்தான் அணியின் முழு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பும் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவு நாட்டின் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::