PAK vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்; பாபர் ஆசாம் அரைசதம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் தந்தனர்.
இதில் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஷஃபிக் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூதும் 3 ரன்களோடு நடையைக் கட்டினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இமாம் உல் ஹக் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் டிம் சௌதீயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் - சௌத் சகீல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனாலும் 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சௌத் சகீலின் விக்கெட்டை டிம் சௌதீ கைப்பற்றினார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்து வருகிறார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இதில் கேப்டன் பாபர் ஆசாம் 54 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் அஹ்மத் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.