நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (7) மற்றும் 3ஆம் வரிசை வீரர் ஷான் மசூத்(3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதபின் இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌத் ஷகீல் 22 ரன்களுக்கு அவுட்டானார்.
இருப்பினும் கேப்டன் பாபர் ஆசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 5ஆவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 196 ரன்களை குவித்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பாபர் அசாம் 161 ரன்களை குவிக்க, அகா சல்மான் அபாரமாக பேட்டிங் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர். கான்வே 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்த டாம் லேதம் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் ஹென்ரி நிகோல்ஸ்(22), டேரைல் மிட்செல் (42), டாம் பிளண்டெல்(47) ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்து ஆட்டமிழந்தனர். இஷ் சோதி 65 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வந்த கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது இரட்டை சதத்தை விளாசினார்.
வில்லியம்சன் இரட்டை சதமடித்ததும், 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை எடுத்திருந்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 174 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆஅவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 10 ரன்களோடு நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இமான் உல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இமாம் உல் ஹக் 45 ரன்கலுடனும், நௌமன் அலி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 97 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.