PAK vs NZ,2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!

Updated: Wed, Jan 11 2023 22:57 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்ததாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலென், டெவான் கான்வே ஆகியோர் களம் இரங்கினர். இதில் ஃபின் ஆலென் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் புகுந்தார்.

இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே சதமும், வில்லியம்சன் அரைசதமும் அடித்து அசத்தினர். இதில் கான்வே 101 ரன்னும், வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து களம் இறங்கிய டேரில் மிட்செல் 5 ரன்னிலும், டாம் லதாம் 2 ரன்னிலும், கிலென் பிலிப்ஸ் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் 8 ரன்னிலும், இஷ் ஷோதி 7 ரன்னிலும், சவுதி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

ஒரு கட்டத்தில் 183 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 261 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே 101 ரன்னும், வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர்.பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் ரன் ஏதுமின்றியும், இமாம் உல் ஹக் 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தனார்.

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 28 ரன்னிலும், ஹாரிஸ் சொஹைல் 10 ரன்னிலும், முகமது நவாஸ் 3 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேசமயம் பாபர் ஆசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 79 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.

இதனால் 43 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் சமன்செய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை