PAK vs NZ, 2nd Test: சர்ஃப்ராஸ் அபார சதம்; தோல்வியைத் தவிர்த்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 449 ரன்களும், பாகிஸ்தான் அணி 408 ரன்களும் அடித்தனர்.
இட்தையடுத்து 41 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 277 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 318 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் பாகிஸ்தான் அணி 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் முடிவில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் இன்று 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இமாம் உல் ஹக் 12 ரன்கள், பாபர் அசாம் 27 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க 80 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.
அப்போது ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது மற்றும் முதல் இன்னிங்சில் சதம் அடித்த சௌத் சகீல் இருவரும் விக்கெட் இழக்க விடாமல் சரிவிலிருந்து மீட்டுனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆஹா சல்மானும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் அஹ்மத் சதமடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் அவரது ஆட்டமும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இப்போட்டியில் 176 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 118 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் இறுதியில் நசீம் ஷா - அப்ரார் அஹ்மத் இணை கடைசி விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்று அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். இதனால் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது. மேலும் இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் ஆட்டமும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரில் 3 அரைசதம், ஒரு சதம் உள்பட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் கம்பேக் கொடுத்ததுடன், பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.