PAK vs NZ: பாகிஸ்தானுக்கு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டாம் பிளெண்டல் இணை களமிறங்கினர். இதில் வில் யங் ஒருமுனையில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய டாம் பிளெண்டல் 15 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஹென்றி நிகோலஸ் 23 ரன்களிலும் என ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் யங்கும் 87 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லேதம் - மார்க் சாப்மேன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியனர். இதில் டாம் லேதம் தனது அரைசதத்தைக் கடந்தார்.
அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாப்மேன் 43 ரன்களில் ஆட்டமிழக்க, டாம் லேதமும் 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த கோல் மெக்கன்ஸி 26 ரன்களிலும், ஆடம் மில்னே 4 ரன்களிலும், ஹென்றி ஷிப்லி 3 ரன்களிலும் என அடுத்தடுத்து ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர், சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.