பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் (200), டாம் லேதமின் அபார சதம்(113), டெவான் கான்வே(92), இஷ் சோதியின் (65) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமது (53), சௌத் ஷகீல் (55) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, முகமது வாசிம் 43 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் அடித்து 2ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆட்டத்தில் கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே மீதமிருந்த நிலையில், 137 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றிருந்த போதிலும், முடிந்தால் 15 ஓவரில் 138 ரன்கள் என்ற இலக்கை அடித்து பாருங்கள் என்ற துணிச்சலுடன் நியூசிலாந்துக்கு வாய்ப்பு கொடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.
அந்த 15 ஓவரில் நியூசிலாந்தின் 10 விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இல்லாதபோதிலும், நியூசிலாந்து முடிந்தால் வெற்றி பெறட்டும் என்ற துணிச்சலுடன் போட்டியில் முடிவை பெறும் நோக்கில் டிக்ளேர் செய்தார் பாபர் ஆசாம். 138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் அதிரடியாக பேட்டிங் ஆடி இலக்கை எட்டும் முனைப்பில் ஆடினர். ஆனால் 7.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 61 ரன்கள் அடித்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதால் போட்டி டிராவானது.
பாபர் அசாம் டிக்ளேர் செய்தது குறித்து பேசிய கேன் வில்லியம்சன், “ஒரு மணி நேர ஆட்டம் மீதமிருந்த நிலையில், பாபர் அசாம் டிக்ளேர் செய்தது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நியூசிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். உண்மையாகவே, பாபர் அசாமின் முடிவு மிகத்துணிச்சலானது. கடைசி 7 ஒவரில் லேதம் மற்றும் கான்வே ஆகிய இருவரும் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்தனர்” என்று தெரிவித்தார்.