PAK vs WI, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முன் வரிசை வீரர்களின் அபாரமான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 ரன்களையும், ப்ரூக்ஸ் 49 ரன்களைச் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 158 ரன்களை விளாசி அசத்தியது. பின் 79 ரன்களில் பாபர் ஆசாம் ஆட்டமிழக்க, 86 ரன்னில் முகமது ரிஸ்வானும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய பகர் ஸமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் ஆசிஃப் அலி தனது பங்கிற்கு 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் 18.5 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது.