மகளிர் ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்!

Updated: Mon, Oct 03 2022 12:08 IST
Image Source: Google

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீராங்கனைகள் பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதிலும் கேப்டன் நிகர் சுல்தானா (17), லதா மந்தல் (12), சல்மா காதும் (24) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டயானா பெய்க், நிதா தார் தலா 2 விக்கெட்டுகளையும், சதியா இக்பால், ஒமைமா சோஹைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முனீபா அலி - சித்ரா அமீன் இணை தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கியனர். இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த அணி மளமளவென ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் 19 ரன்களைச் சேர்த்திருந்த முனீபா அலி, சல்மா காதும் பந்துவீச்சில் சாமிமா சுல்தானாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் சித்ரா அமீனுடன், கேப்டன் பிஸ்மா மரூஃப் ஜோடி சேர்ந்தார். 

மரூஃப் ஒரு முனையில் பொறுமையாக விளையாட, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சித்ரா அமீன் 36 ரன்களைச் சேர்த்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை