எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

Updated: Tue, Oct 31 2023 11:36 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுக்க ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டான போதிலும் மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 39 ரன்கள் எடுத்தார்.

அதை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 62, கேப்டன் ஷாஹிதி 58, ஓமர்சாய் 73 ரன்களை விளாசி 45.2 ஓவரிலேயே ஆஃப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மேலும் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது இலங்கையையும் தோற்கடித்து 3ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் தங்களுடைய இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ராட் முக்கிய பங்காற்றுவதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய் அவர், “3 துறைகளிலும் அசத்திய எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். கடந்த போட்டியில் வென்றது எவ்விதமான இலக்கையும் எங்களால் சேசிங் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது. 

குறிப்பாக எங்களுடைய பவுலர்கள் தரமாக செயல்பட்டனர். இந்த வெற்றியில் அனைத்து பயிற்சியாளர்களும் கடினமாக உழைத்து எங்களுக்கு அதிக தன்னம்பிக்கை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜொனதன் ட்ராட் எப்போதும் நேர்மறையாக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னுடைய மனதை பெரிய அளவில் மாற்றியது. 

ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்துவதை இத்தொடர் முழுவதும் நான் விரும்புகிறேன். மேலும் சிறந்த வீரரான ரசித் கான் எப்போதும் எங்களுடைய அணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதிலும் குறிப்பாக நேரடியாக ஆதரவு கொடுத்து வரும் இந்திய ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை