வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடர் செப்டம்பர் 03ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய பாகிஸ்தான் டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அணியில் கேப்டனாக ஷான் மசூத் தொடரும் நிலையில், அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அணியின் நட்சத்திர விரர் ஷாஹீன் அஃப்ரிடி இருக்கும் நிலையில், சௌத் சகீலுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கி இருப்பது ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியடைய செய்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஹசன் அலி, முகமது வாசீம் ஜூனியர் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும் ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ், நௌமன் அலி, சஜித் கான் உள்ளிட்டோருக்கும் டெஸ் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முகமது ஹுரைரா மற்றும் காம்ரன் குலாம் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், அப்துல்லா ஷஃபிக், சர்ஃப்ராஸ் அஹ்மத், ஷாஹீன் அஃப்ரிடி, மிர் ஹம்ஷா, முகமது ரிஸ்வான், சைம் அயூப் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி