டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே அணியுடன் தான் இந்த போட்டியில் களமிறங்கின.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 4 ரன்னுக்கு முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. நன்றாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெற்ற டெவான் கான்வே, பவர்ப்ளேயின் கடைசி பந்தில் 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, க்ளென் ஃபிலிப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் 49 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்த நிலையில், ஜோடி சேர்ந்த வில்லியம்சனும் டேரைல் மிட்செலும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4வது விக்கெட்டுக்கு 68 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதத்தை நெருங்கிய வில்லியம்சன், நன்றாக செட்டில் ஆகிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த டேரைல் மிட்செல், 35 பந்தில் 53 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணி 20 ஓவரில் 152 ரன்கள் அடிக்க உதவினார்.
இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரிஸ்வான் முதல் ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டெவான் கான்வே தவறவிட்டார். அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியானர். இந்த தொடரில் ஃபார்மில் இல்லாமல் இருந்துவந்த பாபர் ஆசாம் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை குவித்தனர். பாபர் அசாம் 53 ரன்களுக்கும், ரிஸ்வான் 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் இலக்கிற்கு அருகே கிட்டத்தட்ட அழைத்துச்சென்றதால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி இலக்கை அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.