டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளே வெற்றிகரமாக உள்ளன - நாசர் ஹூசைன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவையும், நவம்பர் 11ஆம் தேதி இங்கிலாந்து, நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றன என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாசர் ஹூசைன், “இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே மிகவும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. அதிலும் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடக்கத்திலும், மிடில் ஆர்டரில் ஆசிஃப் அலியும் தங்கள் திறனை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றன.
அதேசமயம் இங்கிலாந்து அணியும் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் ஜேசன் ராய் காயமடைந்தது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
Also Read: T20 World Cup 2021
ஆனாலும் இங்கிலாந்து அணியால் தற்போதிருக்கும் வீரர்களை வைத்தே வெற்றியை ஈட்டமுடியும். அதனால் ஜானி பேர்ஸ்டோவ் தொடக்க வீரராகவும், சாம் பில்லிங்ஸை மிடில் ஆர்டரிலும் விளையாட வைக்க வேண்டும். அதன்படி செய்தால் இங்கிலாந்து அணியால் நிச்சயம் வெற்றிபெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.