PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் பிளெண்டல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் டெவான் கான்வே சதத்தை பதிவுசெய்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
TRENDING
பிபிஎல் 2023: மேத்யூ ஷார்ட் சதத்தால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 20, கேப்டன் பாபர் ஆசாம் 24 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 83 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் - சர்ஃப்ராஸ் அஹ்மத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் சர்ஃப்ராஸ் அஹ்மத் 78 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சௌத் சகீல் சதாமடித்து அசத்தினார். ஆனால் பின்னர் களமிறங்கிய அகா சல்மான் 41 ரன்களிலும், ஹசன் அலி, மிர் ஹ்ம்சா, நசீம் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்களைச் சேர்த்திருந்தது.
பின்னர் இன்றி தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் சில ஓவரிலேயே பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டையும் இழந்து 409 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் கடைசி வரை களத்தில் இருந்த சௌத் சகீல் 125 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அதன்பின் 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு அதிர்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் டெவான் கான்வே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்பத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் அரைசதம் கடந்த டாம் லேதம் 65 ரன்களில் ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சனும் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹென்றி நிகோலஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டல் - மைக்கேல் பிரேஸ்வெல் இணை களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் 74 ரன்களில் பிளெண்டல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் சிறிது நேரத்திலேயே நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த பிரேஸ்வெல் 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அஹ்மத், ஹசன் அலி, ஆகா சல்மான், மிர் ஹம்சா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிபெறும் நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பேரதிச்சியாக நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் மற்றும் மிர் ஹம்சா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இமாம் உல் ஹக் 12 ரன்களிலும், ஷான் மசூத் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 27 ரன்களோடு நடையைக் கட்டினார். இதனால் 80 ரன்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த சர்ஃப்ராஸ் அஹ்மத் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சர்ஃப்ராஸ் அஹ்மத் 29 ரன்களுடனும், சௌத் சகீல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனால் நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகளும், பாகிஸ்தான் வெற்றிக்கு 194 ரன்களும் தேவை என்பதால் இப்போட்டியின் மீதான பரபரப்பும் அதிகரித்துள்ளது.