PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ஷான் மசூத்,ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு!

Updated: Thu, Jan 05 2023 19:08 IST
Pakistan have named their ODI squad for the series against New Zealand (Image Source: Google)

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையையொட்டி இந்த ஆண்டு அனைத்து அணிகளும் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. வலுவான அணியை கட்டமைக்கும் பணியில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளன.

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு பிசிசிஐ 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் அணியும் சில வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்படுத்துவதற்காக ஷாஹித் அஃப்ரிடி இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்துள்ளது, அஃப்ரிடி தலைமையிலான தேர்வுக்குழு.

பாபர் அசாம் தலைமையிலான 16 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப், காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷான் மசூத், 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல 2020ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஹாரிஸ் சொஹைலும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராவுஃப், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், காம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம்ஷா, சல்மான் அலி அகா, ஷாநவாஸ் தஹானி, ஷான் மசூத், டயாப் தாஹிர், உஸாமா மிர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை