விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !

Updated: Mon, Dec 18 2023 21:09 IST
Image Source: Google

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடர்ந்து 15ஆவது முறையாக சொந்த மண்ணில் வெற்றி கண்டது.

மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய பாபர் ஆசாமுக்கு பதிலாக புதிய கேப்டன் ஷான் மசூத் தலைமையில் இத்தொடரில் பாகிஸ்தான் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. ஆனால் கேப்டன் மாறினாலும் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி சந்தித்தது.

இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 28ஆவது வருடமாக பாகிஸ்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 1995ஆம் ஆண்டு சிட்னியில் வென்ற அந்த அணி அதன் பின் ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருவது பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு ஓவர் குறைவாக பந்து வீசியதாக போட்டியின் நடுவர் ஐசிசியிடம் புகார் செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு சோதித்துப் பார்த்த ஐசிசி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 6 பந்துகள் குறைவாக வீசி விதிமுறையை மீறிய பாகிஸ்தான் அணிக்கு அந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதைவிட பாகிஸ்தான் அணிக்கு 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்கனவே பெற்றிருந்த புள்ளிகளில் 2 புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் ஏற்கனவே பெற்றிருந்த 24 புள்ளிகளில் பாகிஸ்தான் தற்போது 2 புள்ளிகளை இழந்துள்ளது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் 66.67 சதவீதத்திலிருந்து தற்போது 61.11% புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் 2ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதனால் 66.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை அந்த அணியால் விரைவில் தொட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடைசி 2 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை