ENG vs IND, 3rd ODI: ரிஷப் பந்த் அதிரடி சதம்; தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாததால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் ஆடினார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய இருவரையும் ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். ஜேசன் ராயும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த பார்ட்னர்ஷிப் வளர்ந்துகொண்டிருக்க, ஜேசன் ராயை 41 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸை 27 ரன்னில் வீழ்த்தினார்.
அதன்பின்னர் கேப்டன் பட்லரும் மொயின் அலியும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். 5வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 75 ரன்களை சேர்த்தனர். மொயின் அலியை 34 ரன்களுக்கு ஜடேஜா வீழ்த்த, பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பட்லர்60 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோனையும் ஹர்திக் பாண்டியாவே வீழ்த்தினார்.
பின்வரிசையில் க்ரைக் ஓவர்டன் சிறப்பாக பேட்டிங் ஆடி 32 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இங்கிலாந்து அணியின் டெயிலெண்டர்களை சாஹல் வீழ்த்த, 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தலா 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தனர்.
அதன்பின் 71 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் 106 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின்னும் அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த், டேவிட் வில்லி வீசிய 42ஆவது ஓவரில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம் 42.1 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 113 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 125 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.