ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை!

Updated: Fri, Feb 09 2024 20:13 IST
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை! (Image Source: Google)

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 182 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 88 ரன்களைச் சேர்த்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் பதும் நிஷங்கா படைத்து அசத்தியுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா 189 ரன்கள் அடித்ததே சாதனையாக பார்க்கப்பட்டது. அதனை தற்போது நிஷங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 20 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 210 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை