ZIM vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ZIM vs SL, 2nd ODI: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.
இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிராண்டன் டெய்லரும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பென் கரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை கடந்த நிலையில், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த சிக்கந்தர் ரஸா மற்றும் கிளைவ் மடாண்டே இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் மடாண்டே 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 59 ரன்களைச் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய நுவனிந்து ஃபெர்னாண்டோ 14 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 5 ரன்களிலும், சதீரா சமரவிக்ரம 31 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிஷங்காவுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்கா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சரித் அசலங்காவும் அரைசதம் கடந்து அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இப்போட்டியில் நிஷங்கா 16 பவுண்டரிகளுடன் 122 ரன்களையும், அசலங்கா 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர். இருப்பினும் இலங்கை அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய பதும் நிஷங்கா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.