இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம் - இசிபி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள்.
ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய நிர்வாகிகளின் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளது.
ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவியைப் பறித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.