சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!

Updated: Sat, Dec 30 2023 17:53 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 262 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.

அதை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது களத்தில் முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இருந்தனர். அவர்களை நம்பியே பாகிஸ்தான் அணி இருந்தது. ரிஸ்வான் 35 ரன்கள் எடுத்த நிலையில் பவுன்சர் பந்து ஒன்றை ஆடாமல் தவிர்க்க எண்ணி கைகளை பின்னே இழுத்தார். 

அப்போது பந்து அவர் கைகளில் பட்டு இருக்கலாம் எனக் கருதி ஆஸ்திரேலிய அணி அவுட் கேட்டது. கள அம்பயர் அவுட் தரவில்லை. இதை அடுத்து ரிவ்யூ கேட்டது ஆஸ்திரேலியா. ரிவ்யூவில் பந்து ரிஸ்வானின் கிளவுஸை ஒட்டி அணிந்து இருந்த உறையில் உரசியது போல காட்டியது. இதை அடுத்து மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். 

ஆனால், ரிஸ்வான் தன் கை உறையில் பந்து படவில்லை என மிக உறுதியாக கூறி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், அம்பயர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அதன் பின் பாகிஸ்தான் அணி இயக்குனர் முகமது ஹபீஸ் இது குறித்து போட்டி முடிந்த உடன் ரிவ்யூ மூலம் அம்பயர் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதை சுட்டிக் காட்டி பேசி இருந்தார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ரிஸ்வான் களத்தில் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் வாதமாக உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை