உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது - ராகுல் டிராவிட்!

Updated: Tue, Mar 14 2023 22:35 IST
Playing WTC final right after IPL is going to be a challenge - Rahul Dravid! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. 

அதன்படி வரும் ஜூன் மாதம் 7 முதல் 11ஆம் தேதி வரையில் இங்கிலாந்து உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது. ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 9 நாட்கள் மட்டுமே. அந்த இடைப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட்,  “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது சிறப்பானதாகும். ஆனால், அது மிகவும் சவாலானது. இந்திய கிரிக்கெட் அணி அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு காரணம் அணியின் சிறப்பான செயல்பாடுதான்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இடையே சில நாட்கள்தான் உள்ளன. அதனால் அது நிச்சயம் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். அது அவ்வளவு எளிதாக இருக்காது. இருந்தாலும் இந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.

வீரர்கள் உலக டெஸ்ட் இறுதிக்கு தயாராகும் வகையில் பயிற்சியாளர்கள் தரப்பில் கலந்து பேசி திட்டங்கள் வகுக்கப்படும். அதன் மூலம் இந்த போட்டிக்கு தயாராக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். நிச்சயம் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை