ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஆர்சிபி அணியின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 26 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 12 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 19 ரன்களுக்கும் ஆட்டமிழ்ந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 56 ரன்களையும், ரஜத் படிதார் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் யாஷ் தயாள் பந்தில் ஒரு ரன் எடுத்தவுடன், பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சீசனில் இதுவரை பிரப்சிம்ரன் மொத்தமாக 517 ரன்கள் எடுத்துள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாமல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 500+ ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் மற்றும் ஐபிஎல் தொடரின் 6ஆவது வீரர் எனும் பெருமையையும் பிரப்ஷிம்ரன் சிங் பெற்றுள்ளார். முன்னதாக, 2008 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது ஆஸ்திரேலிடாவின் ஷான் மார்ஷ் 616 ரன்கள் எடுத்ததே இதுநாள் வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சீசனில் 500+ ரன்கள் எடுத்த அன்கேப்ட் வீரர்கள்
- 2008 – ஷான் மார்ஷ்
- 2018 – சூர்யகுமார் யாதவ்
- 2020 – இஷான் கிஷன்
- 2023 – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 2024 – ரியான் பராக்
- 2025 – பிரப்சிம்ரன் சிங்*
இதுதவிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் பிரப்ஷிம்ரன் சிங் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்டியில் கேஎல் ராகுல், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்ரேயாஸ் அயர் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 4 முறையும், ஷான் மார்ஷ் இரண்டு முறையும் 500+ ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள்:
- கேஎல் ராகுல் - 670 ரன்கள் (2020)
- கேஎல் ராகுல் - 659 ரன்கள் (2018)
- கேஎல் ராகுல் - 626 ரன்கள் (2021)
- ஷான் மார்ஷ் - 616 ரன்கள் (2008)
- கேஎல் ராகுல் - 593 ரன்கள் (2019)
- கிளென் மேக்ஸ்வெல் - 552 ரன்கள் (2014)
- ஸ்ரேயாஸ் ஐயர் - 516* ரன்கள் (2025)
- ஷான் மார்ஷ் - 504 ரன்கள் (2011)
- பிரப்சிம்ரன் சிங் - 517* ரன்கள் (2025)