அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 15) நடைபெறற்றது.

Advertisement

ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். 

Advertisement

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய பிரதிகா ரவாலும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 230 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதனபின் சிறப்பாக விளையாடி வந்த பிரதிகா ராவல் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 154 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் தேஜல் ஹசாப்னிஸ் 28 ரன்களையும், ஹர்லீன் தியோல் 15 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 435 ரன்களை விளாசியது. அயர்லாந்து தரப்பில் ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் அணியின் கேப்டன் கேபி லுயிஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய குல்டர் ரெய்லி ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாரா ஃபோர்ப்ஸ் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

அதன்பின் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாரா ஃபோர்ப்ஸும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லாரா டெலானி 10 ரன்களுக்கும், லியா பால் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், தனுஜா கன்வர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய பிரதிகா ராவல் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதையும் வென்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News