கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

Updated: Wed, Jul 05 2023 14:40 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்.  புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி, 112 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்.

கடந்த 2007-2008 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரை இந்தியா வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் இவர். 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் பயணித்த கார், மீரட் பகுதியில் நேற்று விபத்தில் சிக்கியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு நடந்த அந்த பெரும் விபத்தில் பிரவீன் குமாருடன் அவருடைய மகனும் இருந்துள்ளார். பிரவீன் குமார் சென்ற சொகுசு கார், பாண்டவ நகர் பகுதியில் இருந்து திரும்பியபோது வேகமாக வந்த டிரக் அதனுடன் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பெரிய காயங்கள் இன்றி தந்தை மற்றும் மகன் இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர்.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் பிரவீன் குமார் பேசுகையில், “இந்த விபத்து இன்னும் மோசமாக இருந்திருக்கும். நான் உங்களிடம் பேசுகிறேன் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை. கடவுளின் அருளால் மட்டுமே நாங்கள் தற்போது நன்றாக இருக்கிறோம். நான் என் மகனை இறக்கிவிட சென்றிருந்தேன். 

இரவு சுமார் 9.30 மணியளவில் என் காரை பின்னால் ஒரு வாகனம் வேகமாக மோதியது. நாங்கள் சென்றது பெரிய கார் என்பதால் காயங்கள் ஏற்படாமல் போனது. இல்லையெனில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். பம்பர் முழுவதுமாக உடைந்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் காரே மிக மோசமாக சேதமடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் இதே போன்ற கார் விபத்தில் சிக்கிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி, தற்பொது காயங்களில் இருந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை