ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வாருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து சத்தீஸ்கர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் பூபன் லால்வானி இணை களமிறங்கினர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா பவுண்டரியும், சிக்சகளுமாக விளாசித் தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 159 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் பிரித்வி ஷா இன்னிங்ஸின் முதல் செஷனிலேயே சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். அதன்படி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் போட்டியின் முதல் செஷனிலேயே சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். முன்னதாக கடந்த 1950ஆம் ஆண்டு தெற்கு பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய ஜேஎன் சேத் மற்றும் 1965ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிராக சர்வீசஸ் அணிக்காக விளையாடிய பரத் அவஸ்தி ஆகியோரும் முதல் செஷனில் சதமடித்து அசத்தினர்.
அந்த வரிசையில் தற்போது கிட்டதிட்ட 60ஆண்டுகளுக்கு பின் மும்பை அணிக்காக விளையாடிவரும் பிரித்வி ஷா போட்டியின் முதல் செஷனிலேயே சதமடித்து சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முதல் செஷனிலேயே இரு முறை சதமடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் பிரித்வி ஷா படைத்துள்ளார்.
ஏனெனில் கடந்த 2023ஆம் ஆண்டு அஸாம் அணிக்கெதிரான போட்டியிலும், இன்று சத்தீஸ்கர் அணிக்கெதிரான போட்டியிலும் பிரித்வி ஷா போட்டியின் முதல் செஷனிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். காயம் காரணமாக சுமார் 6 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த பிரித்வி மீண்டும் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருவதுடன், சதமடித்தும் அசத்தியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.