மீண்டும் நார்த்தாம்டஷையர் அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா!
இங்கிலாந்தில் ஒரு நாள் கோப்பை என்ற பெயரில் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இந்த வருடம் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா அறிமுகம் ஆனார். ஆனால் அவரால் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
அவர் விளையாடிய 4 போட்டிகளில் 429 ரன்கள் குவித்தார். அதில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 153 பந்துகளில் 244 ரன்கள் அடித்ததும் அடங்கும். அதன்பின் முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனிலிருந்து விலகினார்.
இந்நிலையில் காயம் சரியான பின்பு மீண்டும் 2024 ஆம் ஆண்டு கவுண்டி சீசனில் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா விளையாடுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கவுண்டி சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் கோப்பை இரண்டு தொடர்களிலும் பிரித்வி ஷா விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளது.
இது குறித்து பிரித்வி ஷா கூறுகையில், "அடுத்த சீசனுக்காக மற்ற அணிகளும் என்னை அணுகின. ஆனால் நான் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்கு தான் விளையாட போகிறேன். எனது இலக்கு எப்போதும் அணிக்கான ஆட்டங்களை வெல்வதற்கு உதவுவதாகும். ஆனால் இந்த முறை சீக்கிரம் வெளியேற வேண்டியிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நான் நார்தம்ப்டன்ஷையருடன் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த ஆண்டு எனக்கு வாய்ப்பளித்தனர், மீண்டும் அவர்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
அடுத்த சீசனில் அவர் திரும்புவது பற்றி நார்தாம்ப்டன்ஷையர் அணியின் தலைமை நிர்வாகி ரே பெய்ன் கூறுகையில், "இந்த ஆண்டு ஷா தனது குறுகிய காலத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு அவரை மீண்டும் நாங்கள் அவரைப் பெற விரும்புவதைப் போலவே அவர் திரும்பி வர ஆர்வமாக இருந்தார். அதனால் அது அற்புதமாக முடிந்தது" என்று கூறியுள்ளார்.