வாய்ப்பு கிடைக்காத விரக்த்தில் மனம் திறந்துள்ள பிரித்வி ஷா!

Updated: Sat, Oct 08 2022 15:03 IST
Prithvi Shaw Disappointed Over Not Getting Chance For South Africa ODI Series (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. 

அதனால் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்களை துரத்தும்போது கேப்டன் தவான், கில், ருதுராஜ், இஷான் கிசான் ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி 51/4 என்ற மோசமான தொடக்கத்தை கொடுத்தது தோல்வியை பரிசளித்தது.

ஏனெனில் அதன்பின் ஸ்ரேயஸ் ஐயர் 50, ஷார்துல் தாகூர் 33, சஞ்சு சாம்சன் 86* என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடியும் இந்தியா வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் இந்த தொடரில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்களை குவித்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்கள் அடித்தும் வாய்ப்பை பெறவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, தேர்வுக்குழு என்னை விளையாட நினைக்கும் போது நான் விளையாட தயாராக உள்ளேன். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் இந்தியா ஏ அல்லது எந்த அணியாக இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளேன்.

அத்துடன் என்னுடைய சிறந்த செயல்பாடுகளையும் உடல் தகுதியை சரியாக வைத்துக் கொள்வதிலும் நாம் உறுதியுடன் உள்ளேன். மேலும் என்னுடைய உடல் எடையை குறைக்க நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் பயனாக கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் தற்போது 6 முதல் 7 கிலோ எடை குறைந்துள்ளேன். அதற்காக தினமும் இனிப்பு மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கும் நான் நிறைய ஓடுகிறேன். அதே போல் என்னுடைய உணவு பட்டியலில் சைனீஸ் உணவுகளை முற்றிலும் நீக்கி விட்டேன்.

அந்த வகையில் தற்போது பார்முக்கு திரும்பியுள்ள நான் நிச்சயம் விரைவில் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். அதை செய்வதற்கு நான் தீவிரமாக தயாராகி வருகிறேன்” என்று கூறினார். 

அப்படி இந்தியாவுக்கு விளையாடும் முயற்சியில் அடுத்ததாக வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் துவங்கும் பிரபல உள்ளூர் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கிய ரஹானே தலைமையிலான மும்பை அணியில் பிரிதிவி ஷா களமிறங்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை