ரஞ்சி கோப்பை 2023: முற்சதம் விளாசி பிசிசிஐ-க்கு பதிலடி கொடுத்த பிரித்வி ஷா!
இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில், தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி முதல் நாளில் மட்டும் 240 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற 2ஆம் நாளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கூடுதலாக 139 ரன்கள் சேர்த்து மொத்தமாக 379 ரன்கள் குவித்துள்ளார்.
இப்போட்டி மொத்தம் 383 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்சர்கள், 49 பவுண்டரிகள் உள்பட 379 ரன்கள் குவித்து 21 ரன்களில் 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவருக்கு துணையாக கேப்டன் ரஹானே தனது பங்கிற்கு 302 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தற்போது அசாம் அணி பேட்டிங் செய்து வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சஞ்சய் மஞ்ரேக்கரின் 377 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார். ஆனால், பாபாசாகேப் நிம்பல்காரின் 443 ரன்கள் (நாட் அவுட்) சாதனை மட்டும் இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
மேலும் இப்போட்டியில் பிரித்வி ஷா 373 ரன்கள் அடித்த நிலையில், முன்னதாக விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம்,சையது முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் அடித்த 9 வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக ஸ்வப்னில் கூகளே (351 நாட் அவுட்), சட்டேஷ்வர் புஜாரா (352), விவிஎஸ் லட்சுமணன் (353), சமித் கோகெல் (359), எம் வி ஸ்ரீதர் (366), சஞ்சய் மஞ்ரேக்கர் (377), பாபாசாகேப் நிம்பல்கர் (443 நாட் அவுட்) ஆகியோர் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
இப்படி பல சாதனைகள் புரிந்த பிரித்வி ஷா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. அடுத்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலும் அவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.