முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தோடர்ந்து குல்பதீன் நைப் 9 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் 2 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களிலும், முகமது நபி ரன்கள் ஏதுமின்றியும், கரிம் ஜானத் மற்றும் கேப்டன் ரஷித் கான் ஆகியோர் தலா 8 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளியெ இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இப்ராஹிம் ஸத்ரானைக் கிளீன் போல்டாக்கினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் முகமது நபியையும் அதே ஓவரின் நான்காவது பந்தில் காகிசோ ரபாடா க்ளீன் போல்டாக்கி மிரட்டினார். இந்நிலையில் காகிசோ ரபாடா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.