பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கிங்ஸ் அபார வெற்றி!
அபுதாபில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜில் கான் - பாபர் அசாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷர்ஜில் கானும் 45 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இறுதியில் வால்டன் - தானிஸ் அஸிஸ் அபாரமாக விளையாடி அணிக்கு உதவினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்ஜில் கான், தானிஸ் அஸிஸ் தலா 45 ரன்களை சேர்த்தனர்.
அதன்பின் சவாலான இலக்கை துரத்திய குயிட்டா கிளாடியேட்டஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இறுதிவரை போராடிய கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் அரைசதம் கடந்தும், அவரால் அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.
இதனால் 20 ஓவர்களில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.