பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்சை வீழ்த்தியது பெஷ்வர் ஸால்மி!

Updated: Sat, Jan 29 2022 12:45 IST
PSL 2022: Peshawar Zalmi beat Quetta Gladiators by five wickets (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அஹ்சன் அலி, வில் ஸ்மீத் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக வில் ஸ்மீத் 97 ரன்களையும், அஹ்சன் அலி 73 ரன்களையும் சேர்த்தனர். பெஷ்வர் ஸால்மி அணி தரப்பில் சமீன் குல், உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய பெஷ்வர் ஸால்மி அணிக்கு டாம் கொஹ்லர் - யாசிர் கான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் கொஹ்லர் 22 ரன்னிலும், யசிர் கான் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ஹைதர் அலி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சோயிப் மாலிக் - ஹுசைன் தாலத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இதில் ஹுசைன் தாலத் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் 19.4 ஓவர்களில் பெஷ்வர் ஸால்மி அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை