PSL 2023: குர்பாஸ் அதிரடில் பெஷாவரை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆசாம் மற்றும் முகமது ஹாரிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 76 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 21 பந்தில் 40 ரன்களை விளாசினார். பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ மளமளவென ஆட்டமிழந்தனர்.
சயிம் அயூப் (3), டாம் கோலர் காட்மோர்(1), ரோவ்மன் பவல்(0), ஜிம்மி நீஷம் (6), தசுன் ஷனாகா (11), வஹாப் ரியாஸ்(8), உஸ்மான் காதிர்(7) ஆகியோர் மளமளவென ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற பாபர் அசாம் 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 75 ரன்களை குவித்து தனி நபராய் இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். பாபர் அசாமின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த பெஷாவர் ஸால்மி அணி, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபத் அணியில் தொடக்க வீரர் காலின் முன்ரோ 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்ப்பாஸ் - ரஸ்ஸி வெண்டர் டுசென் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடியா குர்பாஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 62 ரன்களில் குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் கட்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டுசெனும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாதாப் கானும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ஆசிஃப் அலி - அசாம் கான் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் அலி 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 29 ரன்களைச் சேர்த்திருந்தார்.