PSL 2023: முன்ரோ, அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீர ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷர்ஜில் கான் - ஹைதர் அலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஷர்ஜில் கான் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையில் ஹைதர் அலி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் இமாத் வாசிம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த இர்ஃபான் கான் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை பறக்கவிட்டு 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சோயிப் மாலிக்கும் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ரயீஸ், முகமது வாசிம் ஜூனியர், டாம் கரண் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்கள் ஹசன் நவாஸ் 7 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் - காலின் முன்ரோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் வேண்டர் டுசென் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ அரைசதம் கடந்த கையோடு 28 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அசாம் கான் தனது பங்கிற்கு 28 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்த ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரண் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.