PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!

Updated: Thu, Mar 16 2023 23:10 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அயுப் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹசீபுல்லாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார். 

பின் அவருடன் இணைந்த முகமது ஹாரிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 64 ரன்களில் பாபர் ஆசாம் விக்கெட்டை இழக்க, 34 ரன்களை எடுத்திருந்த முகமது ஹாரிஸும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் டாம் கொஹ்லர் ஒருமுனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், அமெர் ஜமல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - சோஹைப் மக்சூத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 60 ரன்களில் மக்சூத் ஆட்டமிழக்க, 57 ரன்களைச் சேர்த்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸும் தனது விக்கெட்டை ஜமாலிடம் பறிகொடுத்தார். பின்பு வந்த ஆசாம் கான், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின் காலின் முன்ரோவும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இஸ்லாமாபாத் அணிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், பிஎஸ்எல் தொடரில் குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை