PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!

Updated: Wed, Mar 08 2023 23:14 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 

அதன்படி பெஷாவர் அணிக்கு பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி தள்ளினர். இதன்மூலம் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 162 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தன. இதில் அயூப் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் 59 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து தனது அதிரடியை காட்டினார். ஆட்டத்தின் 19ஆவது ஓவர் வரை களத்திலிருந்து பாபர் ஆசாம் 65 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 115 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் ரோவ்மன் பாவெல் தலா 2 பவுண்டரி, சிக்சர்கள் என பறக்கவிட்டு 35 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஜேசன் ராய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் கப்தில் 8 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வில் ஸ்மீட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் பவுண்டரியையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு 44 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக விளையாடிய முகமது ஹபீஸும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ராய் 63 பந்துகளில் 20 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 145 ரன்களையும், முகமது ஹபீஸ் 18 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை