பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: பெஷாவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!

Updated: Sun, Mar 17 2024 12:34 IST
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயுப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். 

அவருக்கு துணையாக விளையாடிய முகமது ஹாரிஸும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 73 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமத் ஹாரிஸ் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோர் 18 ரன்களையும், அமர் ஜமால் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாபாமாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், அகா சல்மான், கேப்டன் ஷதாப் கான் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த மார்டின் கப்தில் - இமாத் வசிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து வந்த அசாம் கானும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து இமாத் வசிமுடன் இணைந்த ஹைதர் அலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 52 ரன்களையும், இமாத் வசிம் 59 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை