பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து முல்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - யசிர் கான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த யசிர் கான் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வானும் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த உஸ்மான் கான் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மதும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உஸ்மான் கான் அபார அட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து மிரட்டினார். இத்தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உஸ்மான் கான் 15 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 100 ரன்களையும், கிறிஸ் ஜோர்டன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு காலின் முன்ரோ அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ஆகா சல்மான் 3 ரன்களுடனும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் காலின் முன்ரோவுடன் இணைந்த கேப்டன் ஷதாப் கானும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களில் ஷதாப் கான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அசாம் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோவும் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹைதர் அலி 19 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த இமாத் வசீம் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நடப்பு சீசன் பிஎஸ்எல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News