பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 144 ரன்களில் சுருட்டியது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 2 ரன்களிலும், காலின் முன்ரோ 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆகா சல்மான் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோர்டன் காக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த அகா சல்மான் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அசாம் கான் 13, இமாத் வசீம் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஷதாப் கான் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, உபைத் ஷா ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி, அபாஸ் அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடவுள்ளது.