பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!

Updated: Thu, Mar 07 2024 11:02 IST
Image Source: Google

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் பிஎஸ்எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் இருக்கும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து, பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கும் லாகூர் கலந்தர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து கலமிறங்கிய லாகூர் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஃபர்ஹான் 2 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் - கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து 4 சிக்சர்களை விளாசித்தள்ளிய கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 4 ரன்களுக்கும், அஷான் பாட்டி 13 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்துள்ளது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரூமன் ரயீஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய இஸ்லாமாபாத் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ஆகா சல்மான் 4 ரன்களுக்கும், கேப்டன் ஷதாப் கான் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோவும் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த இமாத் வசிமும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த ஆசாம் கான் - ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் அசாம் கான் 29 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடிய விளையாடிய நசீம் ஷா 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபஹீம் அஷ்ரஃபும் 41 ரன்களி ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லாகூர் அணி தரப்பில் ஸமான் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், லாகூர் கலந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை