பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டார்ஸை கதறவிட்ட சுல்தான்ஸ்!
அபுதாபில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத், ஜான்சன் சார்லஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 73 ரன்களையும், ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய கிளாடியேட்டர்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் சுல்தான்ஸ் அணியின் இம்ரான் தாஹீர் 2 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் ஒரு ஓவரில் ரன் ஏதும் அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கிளாடியேட்டர்ஸ் அணி 12.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.