பிஎஸ்எல் 2021: ஃபகர் ஸமானின் சதத்தினால் கலந்தர்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி ஷர்ஜீல் கான், பாபர் ஆசாமின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 60 ரன்களையும், பாபர் ஆசாம் 41 ரன்களையும் சேர்த்தனர். கலந்தர்ஸ் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய கலந்தர்ஸ் அணியில் அப்துல்லா ஷஃபிக் 8 ரன்னிலும், காம்ரன் குலாம் 6 ரன்னிலும், முகமது ஹபீஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் 56 பந்துகளில் சதமடித்து, பிஎஸ்எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி 106 ரன்களைச் சேர்த்த ஃபகர் ஸமான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.