இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 56 ரன்னில் எடுத்த நிலையில் நிஷங்காவும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பதிவுசெய்த ரோஹித் சர்மாவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணியை கரைசேர்த்தனர். அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 33 ரன்களில் அக்ஸர் படேலும் ஆட்டமிழக்க, இறுதியில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷிவம் தூபேவும் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரனக்ளுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இலங்கை அணி வீரர் துனித் வெல்லாலகே ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய வெல்லாலகே, “எதிரணியிடம் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பதால், நமது தவறுகளை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவர்கள் மீது அழுத்தம் கொடுக்க முடியும். நான் நிஷங்கா பேட்டிங் செய்வதை நிறையவே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு திட்டத்தை வகுத்தபடி அவரது பேட்டிங்கை என் மனதில் வைத்தேன்.
இப்போட்டிக்கான ஆடுகளத்தை எடுத்துக்கொண்டால் அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால் நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுத்து பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தேன். மேற்கொண்டு பந்து நன்றாக சுழன்றதால், நான் பவர்பிளேவில் பந்துவீசுவேன் என்று சரித் அசலங்கா என்னிடம் கூறியிருந்தார். அதோபோல் மைதானத்தில் இருந்தும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அந்த நேரத்தில் ரோஹித்துடன், நான் விக்கெட்-டு-விக்கெட் பந்து வீச முயற்சித்தேன், ஏனென்றால் ஆடுகளத்திலிருந்து எவ்வளவு உதவி இருந்தது என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.